Enter your Email Address to subscribe to our newsletters

கோழிக்கோடு , 13 ஏப்ரல் (ஹி.ச.)
கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண், கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மாயமான இளம்பெண் ஒருவரை காதலித்து, அவருடன் பதிவு திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர், இளம்பெண் மற்றும் அவரது காதலன் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, இளம்பெண் தன்னிச்சையாக காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இருப்பதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இளம்பெண் தனது விருப்பப்படி காதலனுடன் சேர்ந்து வாழ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, இளம்பெண்ணின் குடும்பத்தினரும் காதலனின் தரப்பினரும் கோர்ட்டு வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA