தமிழ்ப் புத்தாண்டு நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படை
ராமநாதபுரம், 14 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்ப் புத்தாண்டு நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர் சமூகத்தில் கவலைக்கிடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீனவர்கள் வழக்கம்போல் அனுமதி சீட்டுகள
Fishermen


ராமநாதபுரம், 14 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்ப் புத்தாண்டு நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர் சமூகத்தில் கவலைக்கிடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீனவர்கள் வழக்கம்போல் அனுமதி சீட்டுகளை பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பலர் மன்னார் கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படை திடீரென நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு முன்வைத்து, ஒரு விசைப்படகுடன் இருந்த நான்கு ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகையும் மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தமிழ்ப் புத்தாண்டு நாளிலேயே நடைபெற்றதால், மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த பதற்றத்திலும் கவலையிலும் உள்ளனர். தொடர்ந்து இவ்வாறான கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார மீனவர்கள் இடையே அச்சம் அதிகரித்து வருகிறது.

இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும், கடலில் செல்லும் போது பாதுகாப்பு குறைபாடு நிலவுகிறது என்றும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசும் உரிய முறையில் தலையிட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Hindusthan Samachar / ANANDHAN