நாளை மறுநாள் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு - த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு
திருப்பூர், 14 ஏப்ரல் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிராசரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். பிரச்சாரத்தில் விஜய் பேசியதாவது: நாளை மறுநாள் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள
நாளை மறுநாள் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு  - த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு


திருப்பூர், 14 ஏப்ரல் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிராசரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

பிரச்சாரத்தில் விஜய் பேசியதாவது:

நாளை மறுநாள் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட உள்ளது.

அதற்கு முன்னர் நெசவாளர்கள் சிறுகுறு நடுத்தர தொழில்கள், விவசாயிகள், காவல்துறையினர் தொடர்பான நமது திட்டங்கள் உங்களிடம் படிக்கிறேன்.

நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்காக அரசுக்கு சொந்தமான ஒரு உலகளாவிய இகாமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்.முக்கிய நகரங்களில் வெற்றி தறி விற்பனை நிலையங்கள் ஷோ ரூம் அமைக்கப்படும்.

நிலையற்ற நூல் விலை மற்றும் மின்சார நெருக்கடி நிலையை பகிர்ந்து கொள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் வங்கி மூலம் தவெக அரசு வழங்கும்.

கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட்களாகவும் விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 1,500 யூனிட்களாகவும் உயர்த்தப்படும்.

நெசவாளர் உற்பத்தி செலவை குறைப்பதற்காக அவர்கள் வழங்கும் நூல், சாயங்கள் மற்றும் ரசாயனங்களுக்கு தவெக அரசு 50 சதவீத மானியம் வழங்கும்.

தவெக அரசில் அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். மேலும் நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் மாதம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைதான் MSME இந்தியாவில் அதிக சிறுகுறு நிறுவனங்கள் இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று ஆனால் இந்தியாவிலேயே அதிகமான சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதில் தமிழகம் இரண்டாவது மாநிலம் இந்த பெருமையை உண்டாக்கியது தான் திமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனை.

தற்போது இந்த சிறுகுறு நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக தவெக அரசு செய்யும் பணிகள்.

முதலில் நெருக்கடியில் உள்ள சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாயில் ஸ்டேட் கிரெடிட் கியாரண்டி நிதி உருவாக்கப்படும்.

குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதற்கு முக்கிய காரணம் ஒன்று 400 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ள பீக்ஹவர்ஸ் மின்கட்டணம். இதனால் ஜவுளித்துறையில் உள்ள சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதித்துள்ளது.

இந்த பீக்ஹவர்ஸ் மின்கட்டணத்தை தவெக அரசு நிறுத்திவைக்கும். விரிவான ஆய்வுக்கு பிறகே மின்கட்டணத்தை முறைபடுத்துவோம்

சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுக்கு 100 சதவீதம் மின்சார வரிவிலக்கை பெறும்.

சிறுகுறுநடுத்தர தொழில்நிறுவனங்கள் உலகளவில் போட்டி போடுவதை உறுதி செய்ய, அவற்றை நவீனமயமாக்க ஒரு யூனிட்டுக்கு 50 லட்சம் வரை என்ற அளவில் 35 சதவீத நேரடி மூலதன மானியத்தை தவெக அரசு வழங்கும்.

5ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்குவேளாண் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி.

5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

குறைந்த பட்ச ஆதாரவிலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்.

நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 3,500 ரூபாயம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4, 500 ரூபாயும் வழங்கப்படும்.

உழவர்களின் தோழன் திட்டத்தின்படி குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் அவர்களின் நேரடி முதலீட்டு ஆதரவு தொகையாக வழங்கப்படும்.

100 சதவீதம் பயிர் காப்பீடு திட்டத்தின்படி பயிர்பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

அரசு ஊழியர்களின் நலனுக்காக பழைய பென்சன் திட்டம் மீண்டும் வழங்குவது குறித்து நமது தவெக அரசு கனிவுடன் பரிசீலனை செய்து மதிப்பீடு செய்யும்.

5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசு பணியை நிறைவு செய்த அனைத்து தற்காலிக ஆசிரியர்கள், நர்சுகள், எழுத்தர் பணியாளர்களை தவெக அரசு பணி நிரந்தரம் செய்யும்.

பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாசாரத்தை தவெக அரசு முடிவு செய்யும் அனைத்து அரசு ஊழியர்கள் பணியிட மாற்றம் வெளிப்படையான மற்றும் கால வரையறைக்கு உட்பட்ட முறையில் நடைமுறைபடுத்தப்படும்.

காவலர்களின் அடிப்படை மாத ஊதியத்தை18,200 ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக தவெக அரசு உயர்த்தும்.

அதிக மன அழுத்தம் உள்ள பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்க பணிப்படியாக மாதம் ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்.

காவலர் நலன் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டத்தை தவெக அரசு இயற்றும். அச்சட்டத்தின்படி காவலர்களின் பணி நேரம் முறைப்படுத்தப்படும். அதிக பணி சுமை கொண்ட காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை உறுதி செய்யப்படும்.

சலவைப்படி 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

மதுரை, கோவை திருச்சி திருநெல்வேலி, சேலம் வேலூரில் காவலர் நல மருத்துவமனைகளை தவெக அரசு நிறுவும்.

பாதுகாப்பு நெறிமுறை அல்லது பாதுகாப்புபணிகளுக்கு பெண் காவலர் அதிகாரிகள் நியமிக்கப்பட மாட்டார்கள். பெண் காவல் துறை பணியாளர்களுக்கு என தனி ஓய்வறைகளும் நடமாடும் டாய்லெட் யூனிட்களும் அமைக்கப்படும்.

நீங்கள் எல்லோரும் விஜயை 100 சதவீதம் நம்பலாம்.

உங்களுக்காக மட்டுமே வந்துள்ளேன். உங்களுக்கு நன்றிக்கடன் கொடுக்க வந்துள்ளேன். பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.

அதனால் ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும் நல்லதே நடக்கும்.

வெற்றி நிச்சயம்.

இவ்வாறு விஜய் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b