தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார்- த.வெ.க தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு
சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை தி.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாம்பலம் பகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி தவெக தலைவர் விஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தி.நகர் தொகுதி தவெக வேட்பாளர் புஸ்ஸி என்.ஆன
விஜய்


சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை தி.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாம்பலம் பகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி தவெக தலைவர் விஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தி.நகர் தொகுதி தவெக வேட்பாளர் புஸ்ஸி என்.ஆனந்த் மற்றும் தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு ஆகியோரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

குறிப்பாக, கூட்டம் நடத்தும் இடம், நேரம், கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை முன்கூட்டியே அனுமதி பெற்று நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாம்பலம் பகுதியில் நடைபெற்ற தவெக பிரசார நிகழ்ச்சியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மக்கள் திரண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பதிலாக ‘ரோடு ஷோ’ நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசர சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்தோஷ்குமார் மாம்பலம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், தேர்தல் விதிமுறைகள் மீறல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் தற்போது சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், தேவையான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் மீண்டும் வலியுறுத்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P