குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏப்ரல் 27 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்திற்குப் பயணம்
புதுடெல்லி, 17 ஏப்ரல் (ஹி.ச.) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏப்ரல் 27 முதல் மே 2 வரை ஆறு நாள் அலுவல்முறைப் பயணமாக இமாச்சலப் பிரதேசத்திற்குச் செல்ல உள்ளார். குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள வரைவுப் பயணத் திட்டத்தின்படி, சிம்லா, அடல் ச
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏப்ரல் 27 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்திற்குப் பயணம்


புதுடெல்லி, 17 ஏப்ரல் (ஹி.ச.)

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏப்ரல் 27 முதல் மே 2 வரை ஆறு நாள் அலுவல்முறைப் பயணமாக இமாச்சலப் பிரதேசத்திற்குச் செல்ல உள்ளார்.

குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள வரைவுப் பயணத் திட்டத்தின்படி, சிம்லா, அடல் சுரங்கப்பாதை (ரோத்தங்) மற்றும் பாலம்பூர் ஆகிய முக்கிய இடங்களுக்கு அவர் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 27-ம் தேதி குடியரசுத் தலைவர், ராஷ்டிரபதி பவனில் இருந்து புறப்பட்டு, பாலம் விமான நிலையம் வழியாக சண்டிகருக்குச் செல்கிறார். அங்கிருந்து இந்திய விமானப்படையின் எம்.ஐ-17 ஹெலிகாப்டர் மூலம் மஷோப்ராவில் உள்ள ராஷ்டிரபதி நிவாஸின் கல்யாணி ஹெலிபேடுக்குச் சென்றடைகிறார். சிம்லா பயணத்தின்போது அவர் ராஷ்டிரபதி நிவாஸில் தங்குகிறார்.

ஏப்ரல் 29-ம் தேதி, குடியரசுத் தலைவர் அடல் சுரங்கப்பாதை பகுதிக்குச் செல்கிறார். சிசு ஹெலிபேடுக்குச் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக சுரங்கத்தின் வடக்கு நுழைவுவாயிலை அடைகிறார். அங்கு எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று, உள்நுழைவு சுரங்கப்பாதையைப் பார்வையிடுகிறார்.

பின்னர் தெற்கு நுழைவுவாயிலுக்குச் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், மாதிரி அறையில் விளக்கக் காட்சியைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேநீர் விருந்துக்குப் பின் மஷோப்ரா திரும்புகிறார்.

ஏப்ரல் 30-ம் தேதி, பாலம்பூருக்குச் செல்லும் குடியரசுத் தலைவர், சி.எஸ்.கே. இமாச்சலப் பிரதேச வேளாண் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார்.

அன்றைய தினமே சிம்லா திரும்பும் அவர், மாலையில் சிம்லாவில் உள்ள ராணுவப் பயிற்சி கட்டளையகத்திற்குச் செல்கிறார்.

மே 1-ம் தேதி ‘அட் ஹோம்’ நிகழ்ச்சி உள்ளிட்ட அலுவல்முறை சந்திப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, மே 2-ம் தேதி மஷோப்ராவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சண்டிகர் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

பயணத் திட்டம் தற்போது வரைவு நிலையில் உள்ளதாகவும், சில நிகழ்ச்சிகள் ‘ஒதுக்கப்பட்டவை’ அல்லது ‘உறுதி செய்யப்பட வேண்டியவை’ எனக் குறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b