2026 தமிழக சட்டமன்ற தேர்தல் - அரியலூர் தொகுதி கள நிலவரம்
அரியலூர், 17 ஏப்ரல் (ஹி.ச) மத்திய தமிழ்நாட்டில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், புவியியல், வரலாறு மற்றும் தொழில்துறை எனப் பல துறைகளில் தனித்துவமான சிறப்புகளைக் கொண்டுள்ளது. அரியலூர் பகுதி ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததாகக் கருதப்படுகி
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் - அரியலூர் தொகுதி கள நிலவரம்


அரியலூர், 17 ஏப்ரல் (ஹி.ச)

மத்திய தமிழ்நாட்டில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், புவியியல், வரலாறு மற்றும் தொழில்துறை எனப் பல துறைகளில் தனித்துவமான சிறப்புகளைக் கொண்டுள்ளது.

அரியலூர் பகுதி ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் இங்கு பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கின்றன.

கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் டைனோசர் முட்டைகள் மற்றும் எலும்புப் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழப்பழுவூரில் இந்த அரிய படிமங்களைப் பாதுகாக்க ஒரு தொல்லுயிர் படிம அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவில், யுனெஸ்கோ (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் சிற்பக் கலை மற்றும் கட்டிடக்கலை உலகப் புகழ் பெற்றது.

சோழபுர ஏரி சோழர் காலத்தில் வெட்டப்பட்ட ஒரு மிகப்பெரிய ஏரியாகும்.

அரியலூர் மாவட்டம் சுண்ணாம்பு கல் (Limestone) படிமங்கள் நிறைந்த பகுதியாகும். இதனால் இது தமிழ்நாட்டின் சிமெண்ட் உற்பத்தியின் மையமாக விளங்குகிறது.

இங்கு பல அரசு மற்றும் தனியார் சிமெண்ட் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி (Lignite) மற்றும் எண்ணெய் வளங்கள் அதிக அளவில் உள்ளன.

திருமழபாடி வைத்தியநாதர் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்குத் திருமணம் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. திருமணத் தடை நீங்க இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

450 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், வெளிநாட்டுப் பறவைகள் வலசை வரும் முக்கியமான சரணாலயமாகும்.

ஏலாக்குறிச்சி தேவாலயம் வீரமாமுனிவரால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. வேட்டக்குடி-கரைவெட்டி ஏரி தமிழ்நாட்டின் நன்னீர் ஏரிகளில் ஒன்றாகும்.

இம்மாவட்டம் வடக்கே வெள்ளாறு மற்றும் தெற்கே கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் எண்ணிக்கை:

ஆண்கள் - 1,29,521

பெண்கள் - 1,31,624

மூன்றாம் பாலினத்தவர் - 16

மொத்தம் - 2,61,161

உடையார், வன்னியர், மூப்பனார், பட்டியலின மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக முதலியார், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் உள்ளனர்.

அரசியல் நிலவரம்:

இத்தொகுதியில் இதுவரை திமுக, அதிமுக தலா 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சை, தமாகா, மதிமுக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை இத்தொகுதியில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக 7 முறை மோதியுள்ளன. இதில் 4 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது இரு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கு.சின்னப்பா 1,03,975 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் 2-வது முறையாக போட்டியிட்ட தாமரை எஸ்.ராஜேந்திரன் 1,00,741 வாக்குகள் பெற்று 3,234 வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

நாதக வேட்பாளர் சுகுணா குமார் 12,346 வாக்குகளும், அமமுக வேட்பாள் துரை மணிவேல் 2,044 வாக்குகளும் பெற்றனர். தற்போது இந்தத் தொகுதியில் திமுக சார்பில் லதா பாலு, அதிமுக சார்பில் தாமரை எஸ்.ராஜேந்திரன், தவெக சார்பில் சிவக்குமார், நாதக சார்பில் புகழேந்தி உட்பட 15 பேர் களம் காண்கின்றனர்.

தொகுதியின் முதல் திமுக பெண் வேட்பாளரான லதா பாலு, திமுக அரசின் சாதனைகளையும், திமுகவின் தற்போதைய வாக்குறுதிகளையும் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் 3-வது முறையாக களம் காண்கிறார்.

இவர் 2016-ல் இதே தொகுதியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்று, அரசு தலைமைக் கொறடாவாக பணியாற்றினார்.

அப்போது அரியலூருக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தாகவும், கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட திட்டம் கொண்டு வந்தாகவும், அதை திமுக அரசு ரத்து செய்துவிட்டதாகவும் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார். அத்துடன், அதிமுகவின் தற்போதைய தேர்தல் வாக்குறுதிகளையும் சொல்லி ஆதரவு திரட்டுகிறார்.

தவெக வேட்பாளர் சிவக்குமார், நாதக வேட்பாளர் புகழேந்தி ஆகியோர் இளைஞர்கள் பட்டாளத்துடன் பம்பரமாய் சுற்றி வருகின்றனர். இதில், திமுக, அதிமுக இடையே தான் பிரதான போட்டி நிலவுகிறது.

திமுக அரசின் சாதனைகள் கை கொடுக்கும் என திமுக வேட்பாளரும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் தொகுதியில் திமுகவைவிட அதிமுக 9,839 வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதுடன், அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 22,552 வாக்குகள் கிடைத்திருப்பதால், எப்படியும் இந்த முறை வெற்றி பெற்றுவிடலாம் என்று அதிமுக வேட்பாளரும் வலம் வருகின்றனர்.

மக்களின் எதிர்பார்ப்புகள்:

அரியலூர் தனி மாவட்டமாக இருந்தும் முறையான சாக்கடை வடிகால் வசதி, பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள் இல்லை.

சிமென்ட் ஆலைகளுக்கு தனிச்சாலை அமைக்க வேண்டும்.

சிமென்ட் ஆலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வேண்டும்.

திருமானூரில் சேமிப்பு கிடங்குடன் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் வேண்டும்.

திருமானூர், தா.பழூரை மையமாக கொண்டு நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும்.

கொள்ளிடத்தின் குறுக்கே புதிய பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்டவேண்டும்.

போன்ற கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b