மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி - மு.க.ஸ்டாலின் மீது அன்புமணி ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு
சென்னை, 18 ஏப்ரல் (ஹி ச.) மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறாமல் தோல்வியடைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாமக தல
Anbumani


Hh


சென்னை, 18 ஏப்ரல் (ஹி ச.)

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறாமல் தோல்வியடைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 40 எம்.பி.க்கள் திட்டமிட்ட முறையில் இந்த மசோதாவை தோற்கடித்ததாக குற்றம் சாட்டினார்.

பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த முக்கிய மசோதா தோல்வியடைந்தது ஜனநாயகத்திற்கு பின்னடைவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த மசோதாவுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் மு.க. ஸ்டாலின், பிற மாநில எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து அதைத் தோற்கடிக்க முயன்றதாகவும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

பெண்களின் முன்னேற்றத்திற்கும் அரசியல் பங்கேற்புக்கும் தடையாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

தமிழ்நாடு பெண்களுக்கு மரியாதை அளித்து, அவர்களை ஆட்சியிலும் முக்கிய பொறுப்புகளிலும் அமர்த்திய வரலாறு கொண்ட மாநிலம் என்பதை சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் மு.க. ஸ்டாலின் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முயற்சியை எதிர்த்திருப்பது மிகப்பெரிய முரண்பாடு எனத் தெரிவித்தார்.

மேலும், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் திமுக ஆட்சிக்கு வர முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறிய அவர், தற்போது அவர்களுக்கே துரோகம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். பெண்களின் நலனுக்காக செயல்படுவதாக கூறி வந்த திமுகவின் நிலைப்பாடு இப்போது வெளிப்படையாகி விட்டதாகவும், அதன் “முகமூடி கிழிந்துவிட்டது” என்றும் அவர் விமர்சித்தார்.

இந்நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மேற்கொண்டதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கையை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த கருத்துகளை அவர் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ