Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 18 ஏப்ரல் (ஹி.ச.)
தாம்பரம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ் தலைமையில் போலீசார் வேளச்சேரி
சாலையில், செம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவழியாக வந்த வேன் ஒன்றை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில்
கட்டு கட்டாக பணம் இருந்தது.
இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு வருவாய் கோட்டாட்சியர் முரளி, வட்டாட்சியர் நடராஜ், சேலையூர் ஆய்வாளர்
டில்லி பாபு ஆகியோர் முன்னிலையில் பணத்தை வேனில் கொண்டு வந்த ராஜேஷ் (30),
கபிலன் (42) ஆகியோரிடம் பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர்கள் அரசு மதுபான கடைகளில் இருந்து வசூல் செய்த பணத்தை அம்பத்தூர்
கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
அதிகாரிகள் அந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் ஒரு கோடியே, இரண்டு
லட்சத்து, 60 ஆயிரத்து, 717 ரூபாய் இருந்தது தெரிய வந்தது.
ஆனால் பணத்திற்கான எந்த ஆவணமும் இல்லாததாலும், பணத்தைக் கொண்டு வந்த இருவரும்
தெரிவித்த தகவல்களில் முரண்பாடுகள் இருந்ததாலும் பணத்தை பறிமுதல் செய்த
அதிகாரிகள் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம்
பணத்தையும், பணத்தை கொண்டு வந்த இருவரையும் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து வருமானவரித்துறையினர் பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam