Enter your Email Address to subscribe to our newsletters

கோயம்புத்தூர்,18 ஏப்ரல் (ஹி.ச.)
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுக–தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதற்காக கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு, சுமார் 5 லட்சம் தொண்டர்கள் அமரக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மைதானத்தின் கடைசி வரிசையில் இருப்பவர்களும் பிரதமரை காணும் வகையில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு மைதானத்துக்கு அருகில் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய வந்த அதே நாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கோயம்புத்தூர் வந்துள்ளதால், நகரமும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணிக்காக சுமார் 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் பிரதமர் மோடியின் உரை:
கோயம்புத்தூர் அன்பும் கடுமையான உழைப்பும் கொண்ட மக்களின் மண். திமுகவின் ஊழல் நிறைந்த அரசியலை கோவை மக்கள் நிராகரித்துள்ளனர்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்தோம். அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தனிப்பட்ட முறையில் ஆதரவு கோரினேன்.
சாதாரண குடும்ப பெண்கள் அதிக அளவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு வர வேண்டும் என்பதே என் கனவு. துரதிர்ஷ்டவசமாக இந்த மசோதா தோல்வியடைந்தது.
பெண்களுக்கு அதிகாரம் வழங்க திமுக விரும்பவில்லை. இதை நிறைவேற்ற விடாமல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தடுத்துவிட்டன.
சாதாரண தமிழ் குடும்ப பெண்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களாக மாறியிருப்பார்கள்.
மக்கள் உங்கள் உண்மையான முகத்தை அறிந்து விட்டனர்.
உங்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்,இது எங்கள் போராட்டத்தின் முடிவு அல்ல.
இது தொடக்கம்.
தேசிய ஜனநாயக கூட்டணி உங்களுக்காக தொடர்ந்து போராடும்.
திமுகவின் கொள்கைகளை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
இன்று பெருமையாகச் சொல்ல திமுகவிடம் எந்த சாதனையும் இல்லை.
தவறான செயல்களின் விளைவுகளில் இருந்து திமுக தப்ப முடியாது.
சாதாரண பெண்கள் முன்னேறினால் திமுக மற்றும் காங்கிரஸ் ஏன் அதை சகிக்க முடியவில்லை? தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு திமுகவினரை பார்த்தாலும் கேளுங்கள்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் மசோதாவை ஏன் எதிர்த்தீர்கள் என்று.
கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திமுகவின் கொள்கை ‘குடும்பத்துக்காக, குடும்பத்தால், குடும்பத்திற்காக’ என்பதாகும். முதலமைச்சர், துணை முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
ஏப்ரல் 23 அன்று அவர்களுக்கு தெளிவான பதிலை வழங்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV