Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூரில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்து மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரச் சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலின்படி, ஆலையில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் திடீரென வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வெடிப்பின் தாக்கத்தில் ஆலையின் சில பகுதிகள் இடிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி, சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கே. அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது,
கோவிந்தநல்லூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்ற கோணத்திலும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து மீண்டும் ஒருமுறை பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ