Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 19 ஏப்ரல் (ஹி.ச.)
மதுரை வடக்கு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் “தளபதி” மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மருத்துவர் சரவணன் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியில் திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, வேட்பாளர் புகைப்படம் பொறிக்கப்பட்ட கவர்களில் தலா ரூ.1000 வைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வீடியோ ஆதாரங்களுடன் பரவியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பண விநியோகத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பரபரப்பான சூழலில் சிலர் பணத்துடன் தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்த திமுக தொண்டரணி நிர்வாகி பூவலிங்கம் என்பவரை அதிமுகவினர் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடமிருந்து வேட்பாளர் புகைப்படம் பொறித்த 5 கவர்கள் மற்றும் மொத்தம் ரூ.5000 பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், வீடியோ ஆதாரங்களுடன் அவரை செல்லூர் காவல் நிலையம் ஒப்படைத்தனர்.
தற்போது காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா குறித்த குற்றச்சாட்டுகள் எழுவது வாக்காளர்களிடையே கலக்கத்தையும், அரசியல் கட்சிகள் இடையே பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam