உதகை பைக்காரா நீர்வீழ்ச்சி சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடல்
நீலகிரி, 19 ஏப்ரல் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பைக்காரா நீர்வீழ்ச்சி சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ மற்றும் அதனால் பரவி வரும் புகை கா
Pykara Waterfalls


நீலகிரி, 19 ஏப்ரல் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பைக்காரா நீர்வீழ்ச்சி சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ மற்றும் அதனால் பரவி வரும் புகை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உதகைக்கு அருகில் அமைந்துள்ள பைக்காரா வனப்பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட சூழல் சுற்றுலா மையமாகும்.

இந்த பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோடைகாலத்தில் வறட்சியும் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால், காட்டுத்தீ வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் புகை மூட்டம் அதிகரித்து, சுற்றுலா பயணிகள் சுவாசிக்கும் காற்றின் தரமும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையை கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி பைக்காரா நீர்வீழ்ச்சி சூழல் சுற்றுலா தளத்திற்கு பொதுமக்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு செல்லும் அனைத்து வழிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், யாரும் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது கோடை காலம் என்பதாலும், வார இறுதி நாட்கள் என்பதாலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் பைக்காரா நீர்வீழ்ச்சியை நோக்கி வர திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் திடீரென அறிவிக்கப்பட்ட இந்த தடை காரணமாக பலர் தங்களது பயணத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வெளியூரிலிருந்து வந்தவர்கள் இந்த அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வனத்துறையினர் தொடர்ந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், நிலைமை சீராகிய பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN