Enter your Email Address to subscribe to our newsletters

குவஹாத்தி , 20 ஏப்ரல் (ஹி.ச)
விடாது பெய்து வரும் கனமழையால் அசாம் மாநில தலைநகர் குவஹாத்தி மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹாதிகான் மற்றும் அனில் நகர் பகுதிகளில் சாலைகள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இன்று (ஏப்ரல் 20) இடைவிடாது கொட்டித் தீர்த்த பேய் மழையால், நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
சாலைகள் ஆறுகளாக மாறியதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
வாகனங்கள் நீரில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அலுவலகம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
ஹாதிகான், அனில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால், குடியிருப்புகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
மின் தடை, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளால் வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மழை தொடரும் பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால், மாநகராட்சி அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குவஹாத்தி மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று, ஏப்ரல் 20, 2026 விடுமுறை அறிவிக்கப்படுவதாக குவஹாத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து அசாம் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
19/04/2026 அன்று குவஹாத்தி நகரில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக உருவான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குவஹாத்தி மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அரசு மற்றும் தனியார் 20/04/2026 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b