Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 20 ஏப்ரல் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய திருதியையில் பெருமாள் பக்தர்களுக்குக் காட்சி அளிப்பது வழக்கம்.
இந்தாண்டு கருட சேவை இன்று (ஏப்ரல் 20ம் தேதி) நடைபெற்றது. கும்பகோணம் டி.எஸ்.ஆர். பெரிய தெருவில், கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில், சாரங்கபாணி சுவாமி, சக்கரபாணி சுவாமி, ராமசுவாமி, ஆதிவராக சுவாமி, ராஜகோபால சுவாமி, கொட்டையூர் நவநீத கிருஷ்ணசுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் சுவாமி, அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி உள்ளிட்ட 12 கோவில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்திலும், எதிரில் ஆஞ்சநேயர் எழுந்தருளியவுடன் அந்த பெருமாளுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் அருள்பாலித்தனர்.
இந்த 12 பெருமாள் சுவாமிகளையும் ஒரு சேர, ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷம் என்பதால் ஏராளமானோர் தரிசனம் மேற்கொண்டு வழிபட்டனர்.
Hindusthan Samachar / vidya.b