Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் வரும் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பாக வேட்பாளர் மருத்துவர் கிருத்திகா தேவி தொகுதி முழுவதும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது பேட்டி அளித்த அவர், “தாம்பரம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் மக்களின் வரவேற்பு எழுச்சி பிரகாசமாக உள்ளது. நான் புதிய வேட்பாளர் புதிய முகமாக இருந்தாலும், பொதுமக்கள் என்னை ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு இடத்திலும் மகிழ்ச்சியோடும் ஆரவாரத்தோடும் வரவேற்று வருகின்றனர்.
இதுவே எனது வெற்றியின் அறிகுறியாக தென்படுகிறது. என்னை எதிர்த்துப் போட்டிடும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், கடந்த கால தேர்தல்களில் இரண்டு முறை நின்று தோல்வி அடைந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டு உள்ளார். இதனைக் கொண்டே மக்களின் மனநிலை என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.
கடந்த 10 ஆண்டு காலமாக திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா தாம்பரத்தில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து மக்களுக்கு அர்ப்பணித்து உள்ளார். இதனால் தாம்பரம் தொகுதியில் மக்கள் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்” என்றார்.
மேலும், “நான் வெற்றி பெற்று வந்தவுடன் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செய்து முடிப்பேன். குறுகிய சாலைகளை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலை முற்றிலும் ஒழிப்பேன். குடிநீர் பிரச்சனை வராமல் தடுப்பேன்.
வேலைக்கு செல்லக் கூடிய இளம் பெண்கள் தங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். வெற்றி பெற்றவுடன் ஒரு மருத்துவராக தமிழ்நாட்டில் தாம்பரத்தில் முதன்முதலாக குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் அரசு டே கேர் சென்டரை ஆரம்பிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை” என கூறினார்.
தொடர்ந்து, ”அரசு கொடுக்கக் கூடிய திட்டங்களை எதை முதன்மைப்படுத்தி தாம்பரம் தொகுதிக்கு கொண்டு வரவேண்டுமோ அதை அனைத்தையும் நான் கொண்டு வருவேன்.
தாம்பரம் சட்டமன்றத் தொகுதி என்பது திமுகவின் இரும்பு கோட்டை. இந்த களத்தில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் திமுக தான் வெற்றி பெறும். திமுக செய்த சாதனைக்கு பொதுமக்கள் ஆதரவு உள்ளது என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN