தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 வாக்குப்பதிவை முன்னிட்டு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம் – மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.) வரும் 23.04.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, வாக்காளர்கள் எளிதாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் ஜனநாயக உரிமையை பதிவு செய்யும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சி
Bus


சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)

வரும் 23.04.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, வாக்காளர்கள் எளிதாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் ஜனநாயக உரிமையை பதிவு செய்யும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

இதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கு, தேர்தல் நாளான 23.04.2026 அன்று மட்டும் மா.போ.கழகத்தின் சாதாரண கட்டண பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள், தங்களது வயதை உறுதிப்படுத்தும் ஏதேனும் அடையாள ஆவணத்துடன் (Age Proof) வாக்காளர் அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்தால், அவர்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்படும். இச்சலுகைக்காக தனியாக டோக்கன் பெற தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள், அரசால் வழங்கப்பட்டுள்ள UDID அட்டை (Unique Disability ID Card) மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, இலவச பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.

இந்த சலுகை மா.போ.கழகத்தின் சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டும் பொருந்தும்; விரைவு, டீலக்ஸ் உள்ளிட்ட பிற சேவைகளுக்கு இச்சலுகை கிடையாது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வாக்குப்பதிவு நாளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமும் இன்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து தகுதியான வாக்காளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும் மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ