Enter your Email Address to subscribe to our newsletters

மேட்டூர், 21 ஏப்ரல் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நாட்டாமங்கலம் பகுதியில், மது போதையில் இருவர் முதியவரை தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை தூண்டியுள்ளது.
நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (70) என்ற முதியவர், நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, மது போதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் கபிலன் ஆகியோர் சிகரெட் புகையை முதியவரின் முகத்தில் ஊதியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜேந்திரனை, பிரகாஷ் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், முதியவரை தாக்கி கொலை செய்யும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam