Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தாம்பரத்தில் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், அவரது தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் முன்னாள் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி மாநிலங்களவை திமுக உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக மூல வழக்கு பதிவு செய்தும் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணை நடத்துவது கட்டாயமானது என்பதால் வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். நயினார் நாகேந்திரனும், கேசவ விநாயகமும் பாஜகவை சேர்ந்தவர்களாக இருப்பதால் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில், சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும்படி, அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஆதாரங்களின் அடிப்படையில் அதிகாரிகள் தான் முடிவெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திமுக எம்பி கிரிராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN