அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டேன், ‘விசில் சின்னம்’ தான் ஒரே தேர்வு – விஜய் உறுதி மொழி
சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக மக்களுக்கு உணர்ச்சி பூர்வமான திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் “விசில் சின்னம்”க்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில், என் ந
TVK Vijay


Jj


சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக மக்களுக்கு உணர்ச்சி பூர்வமான திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் “விசில் சின்னம்”க்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களான தமிழக மக்களுக்கு நன்றி செலுத்தவே அரசியலுக்கு வந்தேன் என்று கூறிய அவர், அரசியலில் நுழைந்தது முதல் பல்வேறு நெருக்கடிகள், நிர்பந்தங்கள் மற்றும் வேதனைகளை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் குறிப்பிட்ட அவர், மக்கள் விரோத மற்றும் பாசிச சக்திகளுக்கு தளர்ச்சி காட்டமாட்டேன் என்று உறுதியளித்தார். எந்த அழுத்தங்களுக்கும், அதிகார அச்சுறுத்தல்களுக்கும் தன்னை அடக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதரவு தான் தனது அரசியல் பயணத்தின் முதன்மை சக்தி எனக் குறிப்பிட்டார். உங்களின் அன்பே என்னை இயக்கும் சக்தி என்று அவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகம் சமூகநீதி மற்றும் ஜனநாயகத்தை காக்கும் பேரரணாக இருக்கும் என்றும், எந்த தீய சக்திகளாலும் அதை வீழ்த்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை நேரடியாக விமர்சித்த அவர், பண அரசியலில் ஈடுபடும் கட்சிகளுக்கு எதிராக மக்கள் ஒருங்கிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இறுதியாக, ஏப்ரல் 23ஆம் தேதி குடும்பம் குடும்பமாக வாக்களிக்க செல்லுங்கள்; எந்த தயக்கமும் இல்லாமல் ‘விசில் சின்னம்’ ஒன்றையே தேர்வு செய்யுங்கள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாகை சூடுவோம், வரலாறு படைப்போம், வெற்றி நிச்சயம் என அவர் தனது கடிதத்தை முடித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ