புளியந்தோப்பில் சட்டவிரோத மது பதுக்கல் – தேமுதிக நிர்வாகி உட்பட 3 பேர் கைது
சென்னை, 22 ஏப்ரல் (ஹி ச) தமிழ்நாட்டில் நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வரும் நிலையில், சென்னை புளியந்தோப்பு பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்
Bottle


சென்னை, 22 ஏப்ரல் (ஹி ச)

தமிழ்நாட்டில் நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வரும் நிலையில், சென்னை புளியந்தோப்பு பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தலை முன்னிட்டு, மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், சிலர் சட்டவிரோதமாக மது சேமித்து விற்பனை செய்ய முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக பேசின் பிரிட்ஜ் காவல்நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,256 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக, மங்களபுரம் பகுதியை சேர்ந்த எழும்பூர் 61-வது வார்டு தேமுதிக வட்டச் செயலாளர் சசிகுமார் (46), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சாம்பசிவராவ் (43), அயனாவரம் பகுதியை சேர்ந்த சுப்பையா (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சண்முகம் (55) என்பவர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் பணம் மற்றும் மது விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ