Enter your Email Address to subscribe to our newsletters

பித்தம்பூர், 22 ஏப்ரல் (ஹி.ச.)
மத்திய பிரதேச தார் மாவட்டம், பித்தம்பூர் தொழிற்பேட்டை பாக்தூன் செக்டார் 3 பகுதியில் உள்ள தொழில்துறை கழிவு அகற்றும் பிரிவில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் அமைந்துள்ள சுற்றுவட்டார தொழில் பகுதியில் பதற்றம் நிலவியது.
சம்பவத்தின் போது வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் காலி செய்யப்பட்டு அவசர சேவைகள் விரைந்து செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி, ஹஸார்கோ கழிவு ஆலையில் இருந்து அடர் புகை தொடர்ந்து வெளியேறி வருகிறது. சம்பவ இடத்தில் தீயணைப்பு வாகனங்கள் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.
ஹஸார்கோ கழிவு ஆலையில் தொடங்கிய தீ, அருகில் உள்ள இரண்டு அல்லது மூன்று தளங்களுக்கும் பரவிய பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ மேலும் பரவாமல் தடுக்க இந்தூர் மாநகராட்சி குழுக்கள் உட்பட தீயணைப்பு வாகனங்கள், சரளை டம்பர்கள் மற்றும் நுரை தெளிப்பு வாகனங்கள் களமிறக்கப்பட்டன.
அவசரகாலக் குழுக்களின் உடனடி நடவடிக்கையை தார் மாவட்ட ஆட்சியர் அபிஷேக் சவுத்ரி உறுதிப்படுத்தினார். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று காவல் கண்காணிப்பாளர் மயங்க் அவஸ்தி தெரிவித்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள வழித்தடங்கள் மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.
தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னர், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b