ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்கான பணிகள் தீவிரம்
நீலகிரி, 22 ஏப்ரல் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறும். இந்த மலர் கண்காட்
Preparations for the Flower Show


நீலகிரி, 22 ஏப்ரல் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவது வழக்கம்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறும்.

இந்த மலர் கண்காட்சியை காண வெளி நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறனர்.

ஆண்டு தோறும் மே மாதம் 3வது வாரத்தில் இந்த மலர் கண்காட்சி நடத்தப்படும். ஆனால், இம்முறை சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் இதுவரை மலர் கண்காட்சி நடத்தும் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.

இருப்பினும் பூங்காவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

40 ஆயிரம் மலர் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, பிக்கோனியா, சால்வியா, டெய்சி, டேலியா உட்பட பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இச்செடிகளில் மலர்கள் பூக்கத்துவங்கியுள்ளன. இந்த தொட்டிகளில் மலர்கள் பூத்த நிலையில், அவைகளை பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது தவிர பூங்காவில் அனைத்து பகுதிகளிலும் நடவு செய்யப்பட்டுள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகளில் மலர்கள் பூக்கத்துவங்கியுள்ளன.

சுற்றுலா பயணிகள் வசதிக்காக பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்தில் பசுமை மாறாமல் காட்சியளிக்க பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இசை நீரூற்று, செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் நடைபாதைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் இந்த மேம்பாட்டு பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா ஆகியவைகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

மே மாதம் 4ம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெற்ற பின்னர் மலர் கண்காட்சிக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b