Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 22 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் நாளை (23-04-26) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கடந்த 1 மாத காலமாக அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் நேற்று (21-04-26) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. இதன் மூலம் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே அமமுக வேட்பாளருக்காக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில், அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர், அங்கு நின்றிருந்த அமமுகவினரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் பணப்பட்டுவாடா செய்வதற்காக அவர்களது கைகளில் சுமார் ரூ.15 லட்சம் அளவிலான பணம் வைத்திருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, அமமுகவினர் 3 பேரை கைது செய்து காரைக்குடி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b