சென்னையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கம்
சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 300 கம்பெனி துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் பெர
சென்னையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கம்


சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 300 கம்பெனி துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் பெருநகர காவல்துறை எல்லைக்குள் 24 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகள் முழுமையாகவும், 8 தொகுதிகள் பகுதியாகவும் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகுதியும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 தொகுதிகளும் பகுதியாக சென்னை காவல்துறை எல்லைக்குள் உள்ளன.

மொத்தமுள்ள 24 தொகுதிகளில் 1,240 இடங்களில் 5,445 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.

தேர்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் 23 துணை ஆணையர்கள், 11 கூடுதல் துணை ஆணையர்கள், 90 உதவி ஆணையர்கள், 428 ஆய்வாளர்கள், 1,520 உதவி ஆய்வாளர்கள்,2,312 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என 21,230 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

இது தவிர்த்து 5 பட்டாலியன் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 485 ரோந்து வாகனங்களில் போலீஸார் ரோந்து செல்கின்றனர். தேர்தலையொட்டி, தற்போது 3 பட்டாலியின் துணை ராணுவப்படையினர் வந்துவிட்டனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் நடுநிலைமையுடன் செயல்படும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையைச் சுற்றியுள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் கூடுதலாக போலீஸார் ஏற்கெனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தலுக்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணிகள் அனைத்தும் பெருநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b