Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச)
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்ற தேர்தல் பரப்புரை, விதிமுறைகளின்படி நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது.
இதனையடுத்து ‘அமைதிக்காலம்’ அமலில் வந்துள்ளது. இந்த காலப்பகுதியில் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் எந்தவிதமான நேரடி அல்லது மறைமுக பிரச்சாரங்களிலும் ஈடுபடக் கூடாது என்பது தேர்தல் விதிமுறையாகும்.
இந்நிலையில், அந்த விதிமுறைகளை மீறி சமூக வலைதளங்களில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக “தவெக” என்ற பெயரில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் ஆதரவு பதிவுகள், விளம்பரக் குறிப்புகள் மற்றும் வாக்காளர்களை பாதிக்கும் வகையிலான தகவல்கள் பரவலாக பகிரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தேவ சகாயம் என்பவர், இந்திய தேர்தல் ஆணையம்-க்கு அதிகாரப்பூர்வ புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தேர்தல் அமைதிக்கால விதிமுறைகளை மீறி நடைபெறும் இந்த ஆன்லைன் பிரச்சாரங்கள் ஜனநாயக முறையை பாதிக்கக்கூடியவை என்றும், வாக்காளர்களின் மனநிலையை மாற்றும் நோக்கத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கைகள் தொடர்பாக உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக, சமூக வலைதளங்களில் நடைபெறும் இத்தகைய பிரச்சாரங்களை கண்காணிக்க சைபர் குற்றப்பிரிவு மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், தேவையானால் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் கால அமைதியை உறுதி செய்யும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகள் இவ்வாறு மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இதுகுறித்து எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது என்பது அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ