ஐ-பேக் சோதனை வழக்கில் மம்தா பானர்ஜிக்கு எதிரான அமலாக்கத் துறை மனு - இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
புதுடெல்லி , 22 ஏப்ரல் (ஹி.ச.) இந்திய அரசியல் நடவடிக்கை குழு (I-PAC) அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான வழக்கில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. அமல
ஐ-பேக் சோதனை வழக்கில் மம்தா பானர்ஜிக்கு எதிரான அமலாக்கத் துறை மனு - இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை


புதுடெல்லி , 22 ஏப்ரல் (ஹி.ச.)

இந்திய அரசியல் நடவடிக்கை குழு (I-PAC) அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான வழக்கில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

அமலாக்கத் துறை நடத்திய சோதனை நடவடிக்கையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான சட்டப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விசாரணை நடைபெறுகிறது.

இந்த விவகாரம் கடந்த ஜனவரி 8-ம் தேதி நடந்த சம்பவத்துடன் தொடர்புடையது.

பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் மோசடியுடன் தொடர்புடைய பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஐ-பேக் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

சோதனை நடந்து கொண்டிருந்தபோதே, மம்தா பானர்ஜி 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஐ-பேக் அலுவலகத்திற்கும், அதன் நிறுவனர் பிரதிக் ஜெயின் வீட்டிற்கும் சென்றதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

அப்போது, மடிக்கணினிகள், கைபேசிகள் மற்றும் தேர்தல் தரவுகள் அடங்கிய ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை அவர் அதிகாரமின்றி எடுத்துச் சென்றதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, ஒரு மாநிலத்தின் உயர் பதவியில் உள்ளவர் மத்திய விசாரணை அமைப்பின் நடவடிக்கைக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றம்சாட்டப்படும் போது, அதற்கான தெளிவான சட்டப்பூர்வ தீர்வுகள் இல்லாதது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்திருந்தது.

இன்றைய விசாரணையில், அமலாக்கத் துறையின் மனு மீது நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒரு மாநில முதல்வருக்கும், மத்திய விசாரணை அமைப்புக்கும் இடையிலான அதிகார மோதல் தொடர்பான இந்த வழக்கு, கூட்டாட்சி அமைப்பு மற்றும் விசாரணை அமைப்புகளின் சுதந்திரம் குறித்த விவாதங்களை மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b