Enter your Email Address to subscribe to our newsletters

தெஹ்ரான், 23 ஏப்ரல் (ஹி.ச.)
மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தென்கொரிய வெளியுறவு அமைச்சரின் சிறப்புத் தூதர் சாங் பியுங்-ஹாவை தெஹ்ரானில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் அதன் விளைவுகளுக்கு 'ஆக்கிரமிப்பாளர்கள்' என வர்ணித்த அராக்சி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை நேரடியாகக் குற்றம்சாட்டினார்.
ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், தென்கொரியா மத்திய கிழக்கு நெருக்கடியை மதிப்பிட சிறப்புத் தூதரை அனுப்ப முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாகவே சாங் பியுங்-ஹா தெஹ்ரான் சென்றார்.
இரு நாடுகளுக்கும் இடையே இது முதல் அமைச்சரவை அளவிலான தொடர்பு என்று சியோல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு தரப்பும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை “திட்டமிட்ட முடிவு” என்றும், “ஈரானின் அணுசக்தி பிரச்சினை அரசியல் சாக்காகப் பயன்படுத்தப்படுகிறது” என்றும் தெஹ்ரானில் உள்ள ஈரான் தூதரகம் கண்டித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பொறுப்பற்ற இராணுவத் தாக்குதல்கள் ராஜதந்திரத்திற்கு இழைக்கப்பட்ட தெளிவான துரோகம் என்றும், இது ஐ.நா. சாசனத்தின் அப்பட்டமான மீறல் என்றும் தூதரகம் வலியுறுத்தியது.
ஈரானின் பதில் பழிவாங்கல் அல்ல, சட்டபூர்வமான தற்காப்பு. ஆக்கிரமிப்பு முழுமையாக முடியும் வரை நாங்கள் தொடர்வோம் என்று ஈரான் தரப்பு தெரிவித்தது.
அமெரிக்க இராணுவம் அரபு நாடுகளில் உள்ள தளங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதால், மோதல் நீடிக்கலாம் என்றும், அதற்கு ஈரான் தயாராக உள்ளது என்றும் ஈரானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தியிலும் அதன் அருகிலும் தென்கொரியாவுடன் தொடர்புடைய 26 கப்பல்கள் சிக்கியுள்ளன. வெளிநாட்டுக் கொடி கொண்ட கப்பல்களில் பணிபுரியும் கொரியர்களையும் சேர்த்து 179 தென்கொரிய கடற்பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் 20% எரிசக்தி போக்குவரத்து நடைபெறுவதால், கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே சியோலின் உடனடி முன்னுரிமையாக உள்ளது.
தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியுன், ஈரானுடன் தொலைபேசியில் பேசும்போது ஹார்முஸ் வழியாக சுதந்திரமான கப்பல் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஈரான் தரப்பும் சிறப்புத் தூதரை வரவேற்பதாகவும், தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாகவும் தென்கொரிய அமைச்சகம் கூறியது.
ஈரான்-தென்கொரிய உறவுகள் 2019-ல் அமெரிக்கா மீண்டும் தடைகளை விதித்த பிறகு மோசமடைந்தன. அப்போது தென்கொரிய வங்கிகளில் இருந்த சுமார் 7 பில்லியன் டாலர் ஈரானிய பணம் முடக்கப்பட்டது. 2023-ல் அமெரிக்கா சொத்து முடக்கத்தை நீக்கிய பிறகு இரு நாட்டு உறவுகளும் மீட்சிப் பாதையில் செல்கின்றன.
கடந்த டிசம்பரில் இரு நாடுகளும் நிர்வாகம், கலாச்சாரம், கல்வி ஆகிய துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பு குறித்து பணிக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடத்தின.
அணுசக்தி பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையிலும், ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம் நீடிக்கும் நிலையிலும், தென்கொரியா போன்ற நடுநிலை நாடுகளின் ராஜதந்திர முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
Hindusthan Samachar / vidya.b