நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் - செல்லூர் ராஜு வேண்டுகோள்
மதுரை, 23 ஏப்ரல் (ஹி.ச.) 2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை தவறாமல் செய்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி
Sellur Raju


மதுரை, 23 ஏப்ரல் (ஹி.ச.)

2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை தவறாமல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

குறிப்பாக, அதிமுக கரை போட்ட துண்டை அணிந்து வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு வாக்களிக்கும் உரிமையை பெற்று தந்த நமது தலைவர்களுக்கு இந்த நேரத்தில் என் சார்பாகவும், அதிமுக சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளைஞர்கள் இந்த நாட்டிற்கு நல்லது செய்யக் கூடிய இயக்கம் எது? யார் நல்லவர்கள்? என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும். இதை எனது அறிவுரையாக அல்ல ஆலோசனையாக கூற விரும்புகிறேன்.

புதிதாக வாக்களிக்க கூடிய இளைஞர்கள் தான் இந்த நாட்டை வல்லரசாக்க கூடியவர்கள்.

இதைதான் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறினார். அந்த வழியில், இந்திய பிரதமர் மோடியும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார்கள்.

வந்தோம், வாக்களித்தோம் என்று இல்லாமல் சற்று சிந்தித்து, யார் மக்களுக்கானவர்கள்? அவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளனவா? என்பதை பார்த்து வாக்களிக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் எங்கெல்லாம் நிற்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் வாக்களிக்க வேண்டியது எங்களுடைய ஜனநாயக கடமை. மதுரையை பொறுத்த வரை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பரவலாக வாக்குப்பதிவு நன்றாக நடைபெறுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. வெயிலுக்கு முன்பாகவே வாக்களித்து விட வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் உள்ளது.

சில இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது காரணமாக வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கி உள்ளது. உடனுக்குடன் மாற்று ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அந்த நேரத்தை தேர்தல் ஆணையம் கனிவோடு பரிசீலனை செய்து கூடுதலாக்கி தர வேண்டும்.

நமது ஒவ்வொருவருக்கும் வாக்கு என்பது நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம். ஆகையால் குடும்பத்தோடு வந்து வாக்களிப்பதை கடமையாக கொள்ள வேண்டும் என்றார்

Hindusthan Samachar / ANANDHAN