Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று (ஏப்ரல் 23) காலை 07.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இம்முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்குமுனை போட்டி நிலவி வரும் நிலையில், காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
காலை முதலே அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளருமான கு. செல்வப்பெருந்தகை, தனது மனைவி மகள் ஆகியோருடன் வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினார்.
இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர்,
அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.
தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம் என்றார்
அவரிடம் வருமான வரித்துறை சோதனை புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு,
வருமான வரித்துறை சோதனை தொடர்பாக நாளை பத்திரிகையாளர்கள் மத்தியில் வீடியோ, போட்டோ ஆதாரங்களை வெளியிடுகிறேன்.
இதுகுறித்து தேர்தல் நேரத்தில் நான் கருத்து தெரிவித்தால் அரசியல் ஆதாயம் தேடுவதாக கூறுவார்கள்.
இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளோம். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின்போது யார் அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள்? யார் அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி இருக்கிறார்கள்? என்பது தெரியவரும் என்றார்.
முன்னதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் தன்னை தொகுதிக்குள்ளேயே சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாகவும், தேர்தல் தொடர்பான அரசியல் பணிகளை செய்வதற்கு தடையாக இருந்ததாகவும், கடந்த 20ஆம் தேதி சமூக ஊடக பக்கத்தில் செல்வப்பெருந்தகை பதிவிட்டிருந்தார்.
ஆனால் வருமான வரித்துறை அதுபோன்று சோதனை எதுவும் நடத்தவில்லை என்றும், அவரது தேர்தல் பணிகளை கட்டுப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியது.
மேலும், அரசுத்துறை மீது அவதூறு குற்றச்சாட்டை சுமத்தியதற்காக தக்க சட்ட நடவடிக்கை எடுக்க, சென்னை கமிஷ்னரிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறது.
Hindusthan Samachar / ANANDHAN