Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 24 ஏப்ரல் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் ஊராட்சி கருத்தானூரைச் சேர்ந்தவர் சத்யா (33). இவருக்கு காமலாபுரம் பூமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாருடன் திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியருக்கு மகிஷா (13) என்ற மகளும், கிஷாந்த் (10) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஓமலூரில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்த சத்யாவுக்கு, அங்கு பணியாற்றிய சக்திவேல் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த பழக்கம் பின்னர் நெருக்கமான உறவாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு சக்திவேல், சத்யா வசித்து வந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த அவர் சத்யாவையும், அருகில் இருந்த அவரது 10 வயது மகன் கிஷாந்தையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்த தாக்குதலில் சத்யாவுக்கு கடுமையான காயம் ஏற்பட்டதுடன், அவரது ஒரு கை துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிறுவன் கிஷாந்தும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தான்.
அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த உறவினர்கள், இருவரையும் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கிஷாந்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த சத்யா மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தாக்குதல் நடத்திய சக்திவேல், சம்பவத்திற்குப் பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P