Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச.)
வருமான வரித்துறை அதிகாரிகள் தான் தங்கியிருந்த இடத்தில் ஆய்வில் ஈடுபட்டார்களா அல்லது இல்லையா என்பது குறித்து தேர்தல் முடிந்த பிறகு, தான் விளக்கம் அளிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (24/04/2026) அவர் செய்தியாளர்களை சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
இதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
கடந்த வாரம் ராகுல் காந்தி பொன்னேரி வந்தார், சோளிங்கர் வந்தார், துறையூர் வந்திருந்தார். அந்த ஏற்பாட்டை காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற முறையில் நான் ஏற்பாடு செய்திருந்தேன். நெருக்கடிகள் வந்தது. நாங்கள் எங்கும் வாய் திறக்கவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக எல்லா நெருக்கடிகளையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
படப்பையில் மனோகரன் என்பவரது வீட்டில் அலுவலகம் வைத்து தங்கி இருக்கிறேன். என்னுடைய வீடு மணிமங்கலம் என்ற குக்கிராமம்.
அங்கு சிசிடிவி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் படப்பையில் நான் தங்கி இருக்கும் இடத்தில் சிசிடிவி இருக்கிறது. அன்றைய தினம் ஆறு கார்களில் தமிழ் பேசத் தெரியாத அதிகாரிகள் முற்றுகையிட்டிருந்தார்கள்.
நான் வழக்கமாக பிரச்சாரத்திற்கு சென்று விட்டேன். படப்பை மனோகரன் 2016, 21, 26 ஆகிய தேர்தலில் எனக்கு முக்கியமானவர்.
திமுகவின் ஒன்றிய செயலாளர். அவரது வீட்டில் தான் என் அலுவலகம் உள்ளது. நான் அங்கு தான் இருக்கிறேன்.
நான் சென்ற வெளியே பிரச்சாரத்திற்கு சென்ற உடனே இவர்கள் வந்துள்ளார்கள். முதலில் ஒரு ஆளை அனுப்பி சிசிடிவி கேமராக்களை ஆப் செய்தார்கள்.
ஒரு ஜனநாயக நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் நீங்கள் சோதனை செய்ய வேண்டும். எதற்கு சிசிடிவியை அணைத்தீர்கள்.
சோதனை செய்து எதுவுமே கிடைக்கவில்லை என்றவுடன் கையெழுத்து வாங்கிவிட்டு வெளியேறி விட்டார்கள்.
ஆனால் மறுநாள் ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள் 'நாங்கள் சோதனை செய்யவில்லை' என்று சொல்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் ஏன் இதுபோன்ற அச்சுறுத்த வேண்டும். சோதனை நடத்தியதால் தான் ராகுல் காந்தியின் பரப்புரைக்கு என்னால் செல்ல முடியவில்லை.
அதிமுக, பாஜக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் ஐடி அதிகாரிகள் இப்படி சோதனை நடத்தினார்களா?
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்கள்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்ர். மே 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.
இதே நேரத்தில், வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதான ஆதாரங்கள் உள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை “வெள்ளை அறிக்கை” வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b