Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 24 ஏப்ரல் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று (ஏப்ரல் 23) விறுவிறுப்பாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 77.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தத் தேர்தலில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி மற்றும் ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளில் மொத்தம் 90 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாவட்டத்தில் 6,16,911 ஆண்கள், 6,48,245 பெண்கள் மற்றும் 146 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 12,65,302 வாக்காளர்கள் உள்ளனர்.
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இறுதி நேரத்தில் வாக்குச்சாவடிகளுக்கு வந்திருந்த 3,322 வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வாக்குப்பதிவு பணிக்காக மாவட்டம் முழுவதும் 4,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அம்பாசமுத்திரம் தவிர, மற்ற 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், தலா இரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
வாக்குப்பதிவு முடிந்ததும், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன.
துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b