இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி, 25 ஏப்ரல் (ஹி.ச) இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை தூத்துக்குடி ''கியூ'' பிரிவு போலீசார் கல்லூரணி கடற்கரை அருகே இன்று பறிமுதல் செய்தனர். கிடைத்த ரகசிய தகவலின் அடிப்ப
Beedi leaves worth Rs 50 lakh seized.


தூத்துக்குடி, 25 ஏப்ரல் (ஹி.ச)

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை தூத்துக்குடி 'கியூ' பிரிவு போலீசார் கல்லூரணி கடற்கரை அருகே இன்று பறிமுதல் செய்தனர்.

கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில், கடற்கரைக்கு செல்லும் வழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 மூட்டை பீடி இலைகள் மீட்கப்பட்டன.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட 'கியூ' பிரிவு போலீசார் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டம், குலத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூரணி பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினர்.

'கியூ' பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான குழுவில், உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமைக் காவலர்கள் இருதயராஜ் குமார் மற்றும் இசக்கி முத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன் மற்றும் பேச்சி ராஜா ஆகியோர் நள்ளிரவு 12:45 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட ஒவ்வொரு மூட்டையும் சுமார் 35 கிலோ எடை கொண்டவை. இவை படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b