Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)
கோவை நகரில் ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை மர்ம நபர் கல்வீசி உடைத்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த அருண் குமார் என்பவர், தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், ஆட்கள் நடமாட்டம் குறைந்த நேரமான நேற்று பிற்பகல் சுமார் 3 மணி அளவில், ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளார்.
அந்த நபர் முதலில் சுற்றுப்புறத்தை கவனித்து யாரும் இல்லையென உறுதி செய்த பிறகு, தனது வாகனத்தில் இருந்து கல்லை எடுத்து, காரின் முன்பக்க கண்ணாடி மீது பலமாக வீசி உடைத்துள்ளார்.
இதனால் கண்ணாடி சிதறி சேதமடைந்தது.
தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்த சாக்கடை அருகே ஏதோ ஒன்றைத் தேடும் விதமாக சில நிமிடங்கள் நடந்துகொண்ட அந்த நபர், பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கார் சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அருண் குமார், அருகிலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த சம்பவம் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
நகரில் சிசிடிவி கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருந்தாலும், இத்தகைய துணிச்சலான செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ