சித்திரை திருவிழாவை முன்னிட்டு வசதிகள் அதிகரிக்க வேண்டும் – இந்து முன்னணி கோரிக்கை
சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.) மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் சார்ந்த சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என இந்து முன்
Hh


சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)

மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் சார்ந்த சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வருடா வருடம் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்து சமய அறநிலையத்துறை முனைப்புடன் செயல்பட்டு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடும் வெயிலை கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்குவதற்காக நிழற்குடைகள் அமைத்தல், போதுமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு கூடுதல் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவசரநிலைகளில் மக்கள் சிரமமின்றி நகர்வதற்காக போக்குவரத்து மேலாண்மை சிறப்பாக செய்யப்பட வேண்டும் என்றும், அதற்காக கூடுதல் காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிறுவர் முதல் முதியோர் வரை அதிகளவில் பங்கேற்கும் இந்த விழாவை முன்னிட்டு மருத்துவ முதலுதவி மையங்களும் அமைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் தாமாக முன்வந்து நடத்தும் அன்னதானம், நீர்மோர் பந்தல் போன்ற சமூகப்பணிகளுக்கு அரசு எந்தவித தடையும் ஏற்படுத்தக்கூடாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக தற்காலிக தங்கும் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் தொடர்பான டிக்கெட் விநியோகத்தில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இணையதளம் மூலம் டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது செயல்படவில்லை என்பதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர் என்றும், டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகளை இந்து சமய அறநிலையத்துறை விசாரித்து, திருவிழா காலங்களில் பக்தர்கள் சீரான தரிசனம் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ