பழம் பெரும் பாடகி  எம்.எஸ் ராஜேஸ்வரி நினைவு தினம்
தமிழ்நாடு, 25 ஏப்ரல் (ஹி.ச.) 1932ம் ஆண்டு பிப்.24ம் தேதி மயிலாப்பூரில் மதுரை சடகோபன் - ராஜசுந்தரிக்கு மகளாக பிறந்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. தாய் பாடகி மற்றும் நாடக நடிகை என்பதால் ராஜேஸ்வரிக்கும் சிறு வயதிலிருந்தே பாடல்களை பாடுவது மிகவும் பிடித்துப்
n


தமிழ்நாடு, 25 ஏப்ரல் (ஹி.ச.)

1932ம் ஆண்டு பிப்.24ம் தேதி மயிலாப்பூரில் மதுரை சடகோபன் - ராஜசுந்தரிக்கு மகளாக பிறந்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

தாய் பாடகி மற்றும் நாடக நடிகை என்பதால் ராஜேஸ்வரிக்கும் சிறு வயதிலிருந்தே பாடல்களை பாடுவது மிகவும் பிடித்துப்போனது.

இதையறிந்த இவர்களது குடும்ப நண்பரான பி.ஆர்.பந்துலு எம்.எஸ்.ராஜேஸ்வரியை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

1946ம் ஆண்டு வெளிவந்த விஜயலெட்சுமி திரைப்படத்தில் 'மையல் மிகவும் மீறுதே' என்ற பாடலைப் பாடி அறிமுகமானார்.

அதன் பின் காரைக்குடி ஏவிஎம் கலையகத்தில் எம்.எஸ் ராஜேஸ்வரி மாத சம்பளத்துக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ’ராமராஜ்யா’ திரைப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டது.

அதில் எம்.எஸ்.ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.

ஏவிஎம் நிறுவனம் காரைக்குடியிலிருந்து சென்னைக்கு இடம் மாறியபோது ராஜேஸ்வரியும் சென்னை வந்தார்.

'நாம் இருவர்' திரைப்படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய 'காந்தி மகான்' மற்றும் இன்னொரு பாடலும் பாட, அந்த பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது.

அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

குறிப்பாக, ஓ ரசிக்கும் சீமானே வா... ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம், மகான் காந்தி மகான்... அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே என்று கமலுக்காக கசிந்துருகிய குழந்தையின் குரல் நம் நினைவில் இன்றும் நினைவில் இருக்கிறது.

அதேபோல சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950 களில் மிகப்பிரபலம்.

'டவுன் பஸ்; என்ற படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

அதே படத்தில் பொன்னான வாழ்வே என்ற பாடலும் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பாடல்.

மேலும் கமல்ஹாசன் முதன்முதலில் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவில் கமலின் அறிமுகக் காட்சியில் பாடும் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பாடலை கேட்டு உருகாதோர் யாரும் இருக்க முடியாது.

குழந்தை நட்சத்திரம் கமலே சொந்தக்குரலில் பாடினாரோ என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு தத்ரூபமாகப் பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி என்ற இளம்பெண் என்பதை கேட்ட ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர்.

அதைத்தொடர்ந்து, குழந்தைகளுக்கான பாடலா கூப்பிடு எம்.எஸ்.ராஜேஸ்வரியை என்று அழைக்கும் அளவுக்கு குழந்தைகள் பாட்டுப்படி பிரபலமான

'கைதி கண்ணாயிரம்' படத்தில் வரும் சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் பாடல், பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா என்ற பாடல், நான் ஏன் பிறந்தேன் படத்தில் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’ சோகப்பாடல் முதல் 1990 க்கு மேல் வந்த ’துர்கா’ படத்தில் பேபி ஷாம்லிக்காக பின்னணிக் குரல் கொடுத்தது வரை பெரிய சாதனைக்கு சொந்தக்காரரானார் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

குழந்தைகளுக்காக மட்டும் தான் பாடியவர் என்று கூற முடியாத அளவுக்கு 1950-களில் பிரபல கதாநாயகிகள் பலருக்கும் பின்னணி பாடல்களைப் பாடியவர்.

அதன் பின்னர் 1970களின் இறுதிவரை புகழ் பெற்றிருந்த அவர் பின்னர் பட வாய்ப்புகளின்றி இருந்தார்.

1989ல் மணிரத்னம் இயக்கிய 'நாயகன்' படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனா ராணி இருவருக்கும் வாய்ப்புக்கொடுத்தார் இளையராஜா.

அந்த படத்தில் அவர் பாடிய நான் சிரித்தால் தீபாவளி பாடல் அப்போது பிரபலமானது.

அதன் பின்னர் சங்கர் கணேஷ் இயக்கத்தில் பல பாடல்களை அவர் பாடினார்.

அவருக்கு வயதானபோதும் குரலுக்கு வயதாகவே இல்லை என்பதை குழந்தை குரலில் பாடி நிரூபித்தார்.

1931-ம் ஆண்டு பிறந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி தனது 87 வது வயதில் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

நினைவு தினமான இன்று அவரை இசையுடன் நினைவு கூர்வோம்.

Hindusthan Samachar / Durai.J