மித்தோஸ்’ ஏஐ அச்சுறுத்தல்,வங்கிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – நிதி அமைச்சர் அறிவுறுத்தல்
புதுடெல்லி, 25 ஏப்ரல் (ஹி.ச.) உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதனால் உருவாகும் சைபர் பாதுகாப்பு சவால்கள் குறித்த கவலைகள் உயர்ந்து வருகின்றன. இந்த நிலையில், ஆன்த்ரோபிக் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘மித
A


புதுடெல்லி, 25 ஏப்ரல் (ஹி.ச.)

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதனால் உருவாகும் சைபர் பாதுகாப்பு சவால்கள் குறித்த கவலைகள் உயர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், ஆன்த்ரோபிக் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘மித்தோஸ்’ என்ற மேம்பட்ட ஏஐ மாடல் வங்கி துறைக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

கணினி பாதுகாப்பு துறையில் திறமையாக செயல்படும் இந்த ஏஐ, சைபர் குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை பயன்படுத்தி தானாகவே தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ‘மித்தோஸ்’ ஏஐ மாடலை பொதுப் பயன்பாட்டிற்கு வெளியிட திட்டமில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சில அங்கீகரிக்கப்படாத நபர்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதையடுத்து, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் மற்றும் கணினி பாதுகாப்பு நிபுணர்களுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் கலந்து கொண்டார்.

அப்போது நிதி அமைச்சர் கூறுகையில்,

தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சைபர் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன.

வங்கிகள் இதை சமாளிக்க முழுமையான தயார் நிலையில் இருக்க வேண்டும். திறமையான சைபர் பாதுகாப்பு நிபுணர்களை நியமித்து, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும், சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் குறித்து உடனுக்குடன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த சம்பவம், ஏஐ வளர்ச்சியுடன் இணைந்த பாதுகாப்பு சவால்கள் குறித்து மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA