Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 26 ஏப்ரல் (ஹி.ச.)
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் பிரதான நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஏப்ரல் 27) நடைபெறவுள்ளது.
இதையொட்டி தேரில் ஏப்ரல் 15-ஆம் தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, தேருக்கு வர்ணம் பூசி, அலங்கரிக்கும் பணி நடைபெற்றது.
இதன் மூலம் 19 அடி உயரம் கொண்ட தேர், அலங்காரத்தின் மூலம் மொத்தம் 50 அடி உயரத்தை எட்டியுள்ளது. சாதாரணமாக 40 டன் எடை கொண்ட இத்தேர் அலங்காரத்துக்கு பிறகு 43 டன்னாக உயர்ந்துள்ளது.
நாளை அதிகாலை 5 மணிக்குள் ஸ்ரீ தியாகராஜர், ஸ்கந்தர், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறவுள்ளது.
தேரில் ஸ்ரீ தியாகராஜர், கமலாம்பாள் எழுந்தருளிய பின்னர், காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடிக்கப்படவுள்ளது.
தேரை பக்தர்கள் பாதுகாப்பாக வடம் பிடித்து செல்ல தேவையான ஏற்பாடுகளை காவல்த்துறை, தீணையப்புத் துறை, மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து வடக்கு வீதி சாலையில் இருபுறமும் கழிநீர் செல்லும் கால்வாய்கள் திறந்த நிலையில் உள்ள இடங்களில் இரும்பு கம்புகளை கொண்டு தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி நடைபெறுகின்றன.
தேரில் உள்ள சுவாமிக்கு தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்ய ஏதுவாக 14 இடங்களில் தேர் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை தஞ்சாவூர் மாவட்டத்துக்கு கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b