Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர் , 26 ஏப்ரல் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில், சித்திரை பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாளான இன்று முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று அதிகாலை மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தங்க கவச அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வாகனங்களில் வந்து படிகள் வழியாக மலைக்கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். பொது வழி மற்றும் ரூ.100 சிறப்பு கட்டண வழியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு இன்று காலை முருகப்பெருமான் புலி வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இன்று இரவு யானை வாகனத்தில் வீதி உலா வருகிறார். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் நீர் மோர், அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b