மதுபானங்களின் விலை மீண்டும் உயர்வு -கர்நாடகாவில் மே 1 முதல் அமல்
பெங்களூரு , 26 ஏப்ரல் (ஹி.ச.) கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட உள்ளது. புதிய மதுபான கொள்கையின் அடிப்படையில் வரி உயர்வு மே 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் மதுபான விலை நிர்ணயம் அரசின் கட்ட
K


பெங்களூரு , 26 ஏப்ரல் (ஹி.ச.)

கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட உள்ளது. புதிய மதுபான கொள்கையின் அடிப்படையில் வரி உயர்வு மே 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் மதுபான விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

உற்பத்தியாளர்கள் பரிந்துரைக்கும் விலையை அடிப்படையாக கொண்டு அரசு அதிகபட்ச சில்லரை விலையை நிர்ணயம் செய்கிறது. மாநிலத்தில் மதுபானங்கள் 16 அடுக்குகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அடுக்குக்கும் தனித்தனி கலால் வரி விதிக்கப்படுகிறது.

காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதிலிருந்து மதுபானங்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. மாநில அரசின் வருவாயில் கலால் வரி முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் அரசு அறிவித்துள்ள 5 உத்தரவாத திட்டங்களால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை சமாளிக்க இந்த வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆல்கஹால் அடிப்படையில் வரி

2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய கொள்கையின்படி, மதுபானத்தில் உள்ள ஆல்கஹால் அளவை அடிப்படையாக கொண்டு வரி விதிக்கப்படும்.

அதன்படி மதுபானங்களின் மீதான வரி சுமார் 20 சதவீதம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்கஹால் அளவு அதிகமாக உள்ள மதுபானங்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்.

இதன் காரணமாக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மதுபானங்களின் விலை சுமார் 20 சதவீதம் வரை உயரக்கூடும் என கூறப்படுகிறது.

விலை உயர்வு விவரம்

இந்த மாற்றத்தால் இந்திய தயாரிப்பு மதுபானங்களான விஸ்கி, ரம், பிராண்டி, ஜின் போன்றவற்றின் விலை குவார்ட்டருக்கு ரூ.15 முதல் ரூ.25 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி ரூ.80க்கு விற்கப்பட்ட மதுபானம் ரூ.95 ஆகவும், ரூ.95க்கு விற்கப்பட்ட மதுபானம் ரூ.110 ஆகவும், ரூ.120க்கு விற்கப்பட்ட மதுபானம் ரூ.135 ஆகவும், ரூ.150க்கு விற்கப்பட்ட மதுபானம் ரூ.170 ஆகவும் உயரும்.

மேலும் முழு பாட்டில்களின் அதிகபட்ச சில்லரை விலை ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகரிக்கலாம்.

மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் சேவை கட்டணங்கள் சேர்க்கப்படுவதால், இறுதி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

சில வகைகளுக்கு குறைவு

அதே நேரத்தில் வெளிநாட்டு உயர்தர மதுபானங்களின் விலை 5 முதல் 15 சதவீதம் வரை குறையக்கூடும்.

பிளாக் டாக், பிளாக் அண்ட் ஒயிட் போன்ற ஸ்காட்ச் வகைகளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் டி.எஸ்.பி. பிளாக் டீலக்ஸ் போன்ற குறைந்த விலை இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களின் விலை 11 முதல் 16 சதவீதம் வரை அதிகரிக்கும்.

பீர் வகைகளிலும் குறிப்பாக அதிக ஆல்கஹால் உள்ளடக்கம் கொண்ட பீர்களின் விலைகளில் சிறிய அளவு உயர்வு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் மதுபான விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA