Enter your Email Address to subscribe to our newsletters

சம்பல், 26 ஏப்ரல் (ஹி.ச.)
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் சந்தௌசி பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பழைய டயர்களில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
டயர்களும், எண்ணெய் கழிவுகளும் அதிகளவில் இருந்ததால் தீ மளமளவென பரவி கரும்புகை வானுயர எழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு பல தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தீயை அணைக்கும் பணியில் தற்போது 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விரைவில் தீ முழுவதுமாக அணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆலையில் இருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விசாரணைக்கு பின்னரே உண்மையான காரணம் தெரியவரும்.
டயர் எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலைகளில் தீ விபத்து அபாயம் அதிகம் என்பதால், பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b