Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் தமிழகத்தில் அடுத்த ஒரு சில நாட்களுக்கான வானிலை குறித்த முன்னறிவிப்புகள் இன்று (26.04.2026) நண்பகல் 01.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளன.
வானிலை அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவியது. அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதுமில்லை என்றாலும், தமிழகத்தின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக வேலூரில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாக திருத்தணியில் 24.0 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 12.5 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெப்பநிலை இயல்பை விட மிக அதிகமாகவும், நீலகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, கரூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும் பதிவாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை.
அதே சமயம் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும், நாளையும் (27.04.2026) என இரு நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மழைப்பொழிவு சற்று அதிகரித்து, தமிழகத்தின் சில இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக ஏப்ரல் 29 அன்று ஒருசில இடங்களில் பலத்த காற்றும் (மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில்) வீசக்கூடும்.
ஏப்ரல் 30 முதல் மே 2ஆம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும். இதர மாவட்டங்களில் வழக்கமான வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை என்றாலும், வெப்பநிலை சற்று உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.
அதிக வெப்பநிலை மற்றும் காற்றில் நிலவும் அதிக ஈரப்பதம் காரணமாக, கடலோரத் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அசௌகரியமான சூழல் நிலவக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸாகவும், நாளை (27.04.2026) 37 முதல் 38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். எனவே அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக லேசான அசௌகரியம் ஏற்படலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b