உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
திருப்பூர், 26 ஏப்ரல் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி மலைப் பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவி, இயற்கை அழகும், ஆன்மிக முக்கியத்துவமும் கொண்ட சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் விழாக்க
Panjalinga Falls


திருப்பூர், 26 ஏப்ரல் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி மலைப் பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவி, இயற்கை அழகும், ஆன்மிக முக்கியத்துவமும் கொண்ட சுற்றுலா தலமாக இருந்து வருகிறது.

குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் இந்த இடத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், கடும் வெயிலில் இருந்து சற்றே தணிவு பெற வேண்டும் என்ற நோக்கில் பலர் பஞ்சலிங்க அருவியை நாடி வருகின்றனர்.

இன்று மட்டும் கூட அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். அருவியில் தண்ணீர் வரத்து குறைந்த அளவில் இருந்தாலும், வந்திருந்தவர்கள் அதில் நீராடி குளிர்ச்சியை அனுபவித்து மகிழ்ந்தனர்.

பஞ்சலிங்க அருவி இயற்கை சூழலில் அமைந்துள்ளதால், குடும்பங்களுடன் வருபவர்கள், இளைஞர்கள், நண்பர்கள் குழுக்கள் என பலரும் இங்கு வந்து நேரத்தை கழித்து வருகின்றனர். சிலர் நீராடுவதுடன், அருகிலுள்ள மலைப்பகுதிகளை சுற்றிப்பார்த்து இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் சுற்றுலா சூழ்நிலையுடன் காணப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், அங்கு உள்ள கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக அருவி பகுதிகளில் சறுக்கி விழும் அபாயம் இருப்பதால், பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சுழற்சி முறையில் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வரும் நாட்களிலும் கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN