Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 27 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார்.
பிரதமரின் வருகைக்காக அரசியல் கொடிகள் மற்றும் சுவரொட்டிகள் உள்ளிட்ட வரவேற்பு அலங்கார வேலைகளில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், அம்மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜவினர் பிரதமரின் வருகைக்காக தயார் செய்த அரசியல் கொடிகள் மற்றும் சுவரொட்டிகளை திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியினர் கிழித்ததாகக் கூறி நேற்று இரவு மோதல்கள் வெடித்தன.
இதனை தொடர்ந்து ஜகத்தால் காவல் நிலையம் முன்பு திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆதரவாளர்கள் நேற்று இரவு மோதிக்கொண்டனர்.
ஜகத்தால் அருகே தங்களது பிரசார பொருட்களை டிஎம்சி ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாக பாஜக தொண்டர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து இரு கட்சியினரும் காவல் நிலையம் முன் திரண்டனர்.
வாக்குவாதம் முற்றி கல்வீச்சு மற்றும் கைகலப்பில் முடிந்தது. நிலைமையை கட்டுப்படுத்த உள்ளூர் போலீஸார் சிரமப்பட்டனர்.
அத்துடன் 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பட்பாரா (பொது) தொகுதியில் போட்டியிடும் பாஜக எம்.எல்.ஏ பவன் சிங் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் வன்முறை மேலும் தீவிரமடைந்தது.
குண்டுவெடிப்பில் பெரும் சேதம் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இந்த கலவரத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பிரதமரின் பேரணிக்கு முன்னதாக பாதுகாப்புப் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்க ஜகத்தால் மற்றும் பட்பாராவில் கூடுதல் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் மற்றும் குண்டுவீச்சு தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், அரசியல் பழிவாங்கல் என இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருவதால் பதற்றம் தொடர்கிறது.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் முக்கியமான தேர்தல் களமாக உள்ளது.
இந் நிலையில்,பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மேற்கு வங்கத்தின் அதிக மக்கள்தொகை கொண்ட இந்த மாவட்டத்தில் ஆதரவு திரட்ட பிரசாரம் செய்து வருகின்றனர். என்பது குறிப்பிடதத்தது.
Hindusthan Samachar / vidya.b