Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச.)
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள “கர” திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் முன்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சேலம் பூவாய் அம்மன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், “கர” என்ற பெயரை மாற்றாமல் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என கோரப்பட்டுள்ளது.
மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே “கரா” என்ற தலைப்பில் தங்களது படப்பெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்ததாகவும், அதே போன்ற பெயரில் தற்போது படம் வெளியிடப்படுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படத்தின் தலைப்பை மாற்றுமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள “கர” படத்தில் தனுஷுடன் மமிதா பைஜு, கே. எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ