Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூா், 27 ஏப்ரல் (ஹி.ச.)
உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைத் பெருவிழா ஏப்ரல் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இன்று காலை 6.20 மணிக்கு திருத்தேரை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் விமூர்த்தானந்தா சுவாமி, தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி வேல் முருகன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்களின் தியாகேசா, ஆரூரா என்ற பக்தி கோஷத்திற்கு மத்தியில் தேர் நிலையை விட்டு நகர்ந்து ஆடி அசைந்து வந்தது.
4 ராஜவீதிகளில் அசைந்தாடி சென்ற திருத்தேர் மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேரோட்டத் திருவிழாவைக் காண வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மோர் வழங்கி தாகம் தீர்த்தனர்.
திருவிழாவிற்கு வந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் நீர் மோர் அருந்தி தாகம் தணித்துக் கொண்டனர்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்த இந்நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b