புதுச்சேரியில் பிரெஞ்சு பாடம் நீக்கம்,மும்மொழி கொள்கையில் இந்தி திணிப்பு - புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா போராட்டம் அறிவிப்பு
புதுச்சேரி, 27 ஏப்ரல் (ஹி.ச.) சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026–27 கல்வியாண்டு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயம் என்ற புதிய அறிவிப்புக்கு எதிராக, புதுச்சேரியில் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவர்
இரா. சிவா


புதுச்சேரி, 27 ஏப்ரல் (ஹி.ச.)

சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026–27 கல்வியாண்டு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயம் என்ற புதிய அறிவிப்புக்கு எதிராக, புதுச்சேரியில் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.

புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்து, போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையின் பெயரில் இந்தி திணிப்பு நடைபெறுகிறது என்றும், இதன் காரணமாக புதுச்சேரியின் தனித்துவமான பிரெஞ்சு மொழி பாடம் நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த திடீர் மாற்றத்தை பள்ளிகள் ஏழு நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என வழங்கப்பட்டுள்ள குறுகிய கால அவகாசம் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவையான பாடப்புத்தகங்கள் கூட இல்லாத நிலையில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவது மாணவர்களின் கல்வித் தரத்தையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆறாம் வகுப்பில் தேர்வு செய்யப்படும் மூன்றாவது மொழியே பின்னர் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் விருப்பப் பாடமாக அமையும் என்கிற நிபந்தனை, மாணவர்களின் எதிர்காலத் தேர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் பிரெஞ்சு கலாச்சார அடையாளத்தை பாதிக்கும் இந்த நடவடிக்கை, அங்குள்ள மக்களின் மொழி உரிமைகளை மீறுவதாகவும், பிரெஞ்சு மொழி ஆசிரியர்களின் வேலைவாய்ப்பையும் பாதிக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள மொழிச் சிறுபான்மையினருக்கு இந்தி அல்லது சமஸ்கிருதம் திணிக்கப்படுவது அவர்களின் உரிமைகளை பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த முடிவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள இரா.சிவா, இதற்கு எதிராக புதுச்சேரியில் பெரிய அளவிலான மொழி உரிமை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam