கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகை போராட்டம் - ‘காலி பாட்டில் திட்டம்’ ரத்து செய்ய வலியுறுத்தல்
கோவை, 27 ஏப்ரல் (ஹி.ச.) கோவையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ள காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பீளமேட்டில் அமைந்துள்ள டா
டாஸ்மாக்


கோவை, 27 ஏப்ரல் (ஹி.ச.)

கோவையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ள காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பீளமேட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் முதல் நிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தமிழக அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் காலி கண்ணாடி பாட்டில்களை மீண்டும் திரும்பப் பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களிடம் இருந்து காலி பாட்டில்களை சேகரித்து, அதற்கான தொகையை திருப்பி வழங்கும் பொறுப்பு டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த திட்டம் ஏற்கனவே குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் இயங்கி வரும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு கூடுதல் வேலைப்பளுவை ஏற்படுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விற்பனை, கணக்குப்பதிவு, இருப்பு பராமரிப்பு உள்ளிட்ட வழக்கமான பணிகளுக்கு மேலாக, காலி பாட்டில்களை சேகரித்தல், பிரித்துவைத்தல், பாதுகாத்தல் மற்றும் ஒப்படைத்தல் போன்ற பணிகளும் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால், இந்த திட்டம் ஊழியர்களை “நவீன கொத்தடிமை” நிலைக்கு தள்ளுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கூடுதல் பணிக்கு உரிய ஊதியம் அல்லது தனி பணியாளர்கள் நியமனம் செய்யாமல், ஒரே ஊழியர்களிடம் அனைத்து பொறுப்புகளையும் திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட டாஸ்மாக் ஊழியர்கள், காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிச்சுமையை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதால், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து, அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P