Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 28 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நீர் தேக்கமாக பவானிசாகர் அணை விளங்குகிறது.
இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பவானி சாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கொடிவேரி அணை வழியாக பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
இதற்கிடையே, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் முதல் போக சாகுபடிக்கு 120 நாட்களுக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த வாய்க்கால்களில் ஆண்டுதோறும் 10 மாதங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்த இரு வாய்க்கால்கள் மூலமாக 25,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று கொடிவேரி அணையில் இருந்து இரு வாய்க்கால்களிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இன்று முதல் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.
120 நாட்களுக்கும் மொத்தம் 8812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு வாய்க்கால்களிலும் தற்போது 50 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
நீர்வளத் துறை அதிகாரிகள், கொடிவேரி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டு வாய்க்காலில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கொடிவேரி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வடக்கு கேரளம் மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சரிவர மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
இருப்பினும் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரை பொதுப்பணித் துறை தொடர்ந்து விநியோகித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 182 அடியாக இருந்தது.
அணையின் நீர்மட்டம் 63.81 அடியாகவும், நீர் இருப்பு 8.55 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2,800 கன அடி தண்ணீர், பவானி ஆற்றில் 200 கன அடி தண்ணீர் என மொத்தம் 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN