மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கின் தீர்ப்பு தமிழில் வெளியானது
மதுரை, 28 ஏப்ரல் (ஹி.ச.) கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது, வேத மந்திரங்களை சமஸ்கிருத மொழிக்கு இணையாக தமிழிலும் பயன்படுத
Madurai High Court


மதுரை, 28 ஏப்ரல் (ஹி.ச.)

கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது, வேத மந்திரங்களை சமஸ்கிருத மொழிக்கு இணையாக தமிழிலும் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, கடந்த வாரம் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி,

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள பொற்றாமரை குளத்தில்தான் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதாக வரலாறு உண்டு.

அந்த பொற்றாமரை குளத்துக்கு தமிழ் இருக்கை என்ற மற்றொரு பெயரும் உண்டு.

தமிழுக்கு சிறப்பு செய்யும் மதுரை என்பதால், புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவின்போது, தமிழுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி கூறுகையில்,

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் தேதி இறுதி செய்யப்படவில்லை. தமிழில் ஓதுவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என அரசு வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.

கோயில் கும்பாபிஷேகத்தில் தமிழில் ஓதுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வரும் ஜூன் 2ஆம் தேதியன்று அறிக்கையாக அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

பொதுவாக உயர்நீதிமன்ற உத்தரவு உத்தரவுகள், தீர்ப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பிறப்பிக்கப்பட்டது. இது, தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடி வரும் வழக்கறிஞர்கள் மத்தியில் வரவேற்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி தனது தீர்ப்பை ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிட்டிருப்பது ஒரு முன்னெடுப்பாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற வரலாற்றில், தமிழில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை என வழக்கறிஞர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, உச்ச நீதிமன்ற வரலாற்றில் 2019 ஜூலை மாதம் சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் சரணடைய விலக்குக் கோரிய வழக்கின் தீர்ப்பும் இந்திய வரலாற்றில் முதல்முறையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கின் தீர்ப்பு தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் பயன்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு, நிலுவையில் உள்ளது.

அதற்காக வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN